Thursday, June 7, 2018

தராவீஹ் 24 ம் நாள்




وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
மனித சமூகத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட உலகத்திருமறை அல்குர்ஆன் மனித சமூகத்திற்குத் தேவையான நல்ல போதனைகளையும் சிறந்த சிந்தனைகளையும் நேரிய நெறிமுறைகளையும் உயரிய வாழ்வியல் வழிமுறைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.மனிதன் மார்க்கம் தடுத்த காரியங்களிலிருந்து தன்னை காத்து சீர்திருத்திக் கொள்ளவும் தன்னை நல்வழிப்படுத்தவும் சோதனைக்களமாக இருக்கிற இந்த வாழ்வில் தான் சந்திக்கிற சோதனைகளில் துவண்டு விடாமல் அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ளவும் அல்லாஹ் தன் அருள்மறை அல்குர்ஆனில் நபிமார்கள், நல்லோர்களின் வரலாறுகளை பதிவு செய்திருக்கிறான்.

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ 
ரசூல்மார்களுடைய செய்திகளிலிருந்து ஒவ்வொன்றையும் உம்முடைய இதயத்தை உறுதிபடுத்துவதற்காக உமக்கு நாம் சொல்லிக் காட்டுகிறோம்என அல்லாஹ் ஹூத் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
குர்ஆன் என்பது வரலாற்று நூலல்ல.என்றாலும் முந்தைய நபிமார்கள், நல்லோர்களின் வரலாற்றுத்துளிகள் நம் உள்ளங்களில் ஈமானிய ஒளியை அதிகப்படுத்தும், துவண்டு போன உள்ளத்தை தட்டி எழுப்பும் ஓர் உற்சாக பானமாக அமையும் என்பதற்காகத்தான் குர்ஆன் நெடுகிலும் வரலாற்றுச் செய்திகளை அல்லாஹ் தெளித்திருக்கிறான்.
அந்த அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்றில் சரித்திர சாதனைகள் புரிந்த, இஸ்லாமியப் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த, தான் வாழ்ந்த காலத்தில் அற்புதமான ஒழுக்க நெறிகளால் தன் குடும்பத்திற்கும் இஸ்லாத்திற்கும் பெருமை சேர்த்த, சமுதாயத்திற்கு நல்ல பலன்களைத் தந்த, தன் உள்ளத்தில் ஈமானை சுமந்திருக்கிற பெண் சமூகத்திற்கான சிறந்த உதாரணம் என்று குர்ஆன் இரண்டு பெண்களை அடையாளப்படுத்துகிறது.1, ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அம்மையார் அவர்கள். 2, மர்யம் அலை அவர்கள். இதில் மர்யம் அலை அவர்கள் மிகப் பிரதானமானவர்கள்.
மர்யம் அலை அவர்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு மதங்களிலும் பிரபல்யமானவர்கள்.இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் இவர்களின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு இது வரை வாழ்ந்த இனி உலக அழிவு நாள் வரை வர இருக்கிற பெண் சமூகத்தில் இவர்களின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெண்மனியின் பெயரையும் குர்ஆன் தன்னில் வைத்திருக்கவில்லை.இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதாரணமாக படிப்பினையாக இவர்களையும் ஆசியா அம்மையாரையும் அல்லாஹ் அடையாளப்படுத்தும் போது கூட ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னின் மனைவி என்று குறிப்பிட்டு விட்டு இவர்களின் பெயரை மட்டும் தான் தெளிவாக குறிப்பிடுகிறான்.பெயர் மட்டுமல்ல இவர்களின் பெயரில் ஒரு அத்தியாயத்தையே குர்ஆன் சுமந்து நிற்கிறது.
உலகத்து பெண்மனிகளில் மிகச்சிறந்த அல்லாஹ்விடத்தில் உயர்வைப் பெற்ற நான்கு பெண்மனிகளில் மர்யம் அலை அவர்களும் ஒருவர்.
أفضَلُ نساءِ أهلِ الجنَّةِ خديجةُ بنتُ خويلدٍ وفاطمةُ بنتُ مُحمَّدٍ ومريمُ بنتُ عِمرانَ وآسيةُ بنتُ مُزاحِمٍ امرأةُ فِرعونَ
சுவனத்து பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1,கதீஜா ரலி அவர்கள். 2,ஃபாத்திமா ரலி அவர்கள். 3,மர்யம் அலை அவர்கள். 4,ஆசியா ரலி அவர்கள்.  (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
لقد فُضِّلَتْ خديجةُ على نساءِ أُمتي كما فضلَتْ مريمُ على نساءِ العالمينَ
என் சமூகத்துப் பெண்களில் கதீஜா சிறந்தவள்.அகிலத்துப் பெண்களில் மர்யம் அலை அவர்கள் சிறந்தவர்கள். (ஃபத்ஹுல் பாரி)  
ما مــن مولــود يولـد إلا نخســـه الشيطان فيستهل صارخاً من نخسة الشيطان ، إلا ابن مريم و أمـه
உலகில் பிறக்கிற எந்தக் குழந்தையும் ஷைத்தானின் தீண்டுதலின்றி பிறப்பதில்லை.ஷைத்தானின் தீண்டுதல் இருப்பதினால் தான் பிறந்தவுடன் அது அழுகிறது.ஆனால் மர்யம் அலை அவர்களையும் அவர்களது மகன் ஈஸா அலை அவர்களையும் தவிர (அவ்விருவருக்கும் ஷைத்தானின் தீண்டுதல் ஏற்பட வில்லை) (ஸஹீஹ் முஸ்லிம்)
மர்யம் அலை அவர்களின் அந்தஸ்து என்ன ? அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் என்ன ? என்பதை இந்த நபிமொழிகள் தெளிவுபடுத்துகிறது.
மர்யம் அலை அவர்களை உலகத்திலுள்ள முஃமினான பெண்களுக்கு அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்.காரணம் அவர்கள்  மிகச்சிறந்த கற்பொழுக்கமிக்க வாழ்விற்கு உதாரணமாக விளங்கினார்கள்.அவர்களது பரிசுத்தமான வாழ்வை திருமறைக் குர்ஆனில் இடம்பெறச் செய்து அல்லாஹ் ஈமான் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய பாடங்களையும் படிப்பினைகளையும் கோடிட்டுக் காட்டுகிறான்.
பெண் என்பவள் மனித ஜாதியே அல்ல, அவளுக்கு சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை என்ற தவறான சிந்தனை கொண்டவர்களுக்கு, பெண் மனித இனம் மட்டுமல்ல சமூகத்தில் அவர்களுக்கு சிறந்த இடம் உண்டு என்பதை மர்யம் அலை அவர்களின் வரலாறை தன் வேதத்தில் கூறுவதின் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான்.
பெண் சமூகம் சம்பந்தமான மோசமான சிந்தனைகளுக்கு மத்தியில் இஸ்லாம் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களுக்கு சமூக அரங்கில் மிக உயர்ந்த அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது என்பதற்கு மர்யம் அலை அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.


ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة
தன் மீது எந்த குற்றமும் இல்லாமல் பரிசுத்தமாக அல்லாஹ்வை சந்திக்கும் வரை ஒரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். (திர்மிதி)
இந்த உலகம் ஒரு சோதனைக்களம்.இந்த உலக வாழ்க்கையில் கஷ்டங்களும்,பிரச்சனைகளும்,சோதனைகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.சோதனைகளை விட்டும் யாரும் தப்ப முடியாது.சோதனைகள் இல்லாமல் யாரும் வாழ முடியாது.அதிலும் ஈமான் கொண்டவர்களுக்கு அந்த ஈமானில் உறுதியாக வலுவாக இருப்பவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை முழுக்க சோதனைகளாகத்தான் இருக்கும்.அந்த சோதனைகளில் அல்லாஹ்வை மறந்து விடாமல் அதில் பொறுமை கொண்டு அந்நிலையிலும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டு வாழ்பவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த ஸ்தானத்தை தருகிறான்.
ஒழுக்கத்திற்கும் நன்நடத்தைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த  மர்யம் அலை அவர்களுக்கு அவற்றிற்கு பாதகம் ஏற்படும் வகையில் மிகப்பெரும் சோதனையை சந்தித்தார்கள்.தந்தையில்லாமல் ஈஸா நபி அலை அவர்களை உலகத்தில் அறிமுகப்படுத்தி தன் ஆற்றலை அகிலத்தாருக்கு உணர்த்த வல்ல இறைவன் நாடி வானவர் கோமான் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலம் மர்யம் அலை அவர்களிடம் ஈஸா நபியின் ரூஹை ஊதினான்.அவர்களும் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுத்தார்கள். ஒரு பெண் மணமுடிக்காமல் ஆண் துணையில்லாமல் குழந்தையைப் பெற்றெடுத்து சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றால் அவள் என்ன விபரீதங்களை சந்திப்பாள் என்பது தெளிவான விஷயம்.
அதனால் தான் குழந்தையைப் பெற்றடுத்த போது மர்யம் அலை அவர்கள், இதற்கு முன்பு நான் மரணித்திருக்க வேண்டுமே அல்லது யாருக்கு தெரியாமல் நான் மறக்கடிக்கப்பட்டிருக்க வேண்டுமே என்று சொன்னார்கள்.
நடக்கவிருக்க அத்தனை விபரீதங்களையும் உணர்ந்திருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி அந்த சோதனைகளை பொருந்திக் கொண்டார்கள்.அதற்குக் கிடைத்த பரிசு தான் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அந்தஸ்து.
மர்யம் அலை அவர்கள் ஆண் துணையின்றி குழந்தையைப் பெற்றெடுத்து தன் சமூகத்திடத்தில் கொண்டு சென்ற போது அம்மக்கள் அவர்களை குறை சொன்னார்கள்.அவர்களது ஒழுக்கத்தை கலங்கப்படுத்தினார்கள். அந்நேரத்தில் அவர்கள் ஒரு உயர்ந்த தத்துவத்தையும் இணைத்து சொன்னார்கள்.
يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
ஹாரூன் வழிச்சகோதரியே உன் தந்தை கெட்ட மனிதரல்ல. உன் தாயும் நடத்தை கெட்டவளல்ல.(அப்படியிருக்க நீ மட்டும் ஏன் இப்படி தவறான காரியத்தை செய்து வந்தாய்) என்று கேட்டார்கள்.
அதாவது பெற்றோர்கள் நல்லவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளும் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். பெற்றோர்கள் கெட்டவர்களாக இருந்தால் அது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பது தான் இதன் பொருள்.
இந்த கருத்தை உலகமும் ஏற்றிருக்கிறது மார்க்கமும் உண்மைப்படுத்து கிறது.எனவே குழந்தைகள் நல்லவர்களாக நல்ல குணமுள்ளவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகின்ற பெற்றோர்கள் முதலில் தங்களை சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை மர்யம் அலை அவர்களின் வரலாற்றின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه
என் அடியான் உபரியான வணக்கங்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறான் என அல்லாஹ் சொல்வதாக நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் (புகாரி)
வணக்கங்களின் மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அவனது பிரியத்தையும் பெறுகிறான்.மர்யம் அலை அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கும் உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அந்தஸ்து அவர்களுக்கு கிடைப்பதற்கும் அவர்களது வணக்கங்களும் அவர்களது தூய்மையான வாழ்வும் தான் காரணமாக அமைந்தது.
عن مجاهد: " يا مريم اقنتي لربك "، قال: كانت تصلي حتى تَرِم قدماها
அவர்களின் பாதங்கள் வீங்கும் அளவு அவர்கள் வணங்குபவர்களாக இருந்தார்கள் என முஜாஹித் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)
أن الله قد اصطفاها، أي: اختارها لكثرة عبادتها وزهادتها وشرفها وطهرها من الأكدار والوسواس
அவர்களது நன்நடத்தை, பற்றற்ற வாழ்வு மற்றும் அவர்களது அதிகமான வணக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். (இப்னுகஸீர்)
எனவே அதிகமான வணக்க வழிபாடுகள் ஒரு மனிதனுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும் உயர்ந்த அந்தஸ்துகளையும் பெற்றுத்தரும் என்பது மர்யம் அலை அவர்களின் வரலாறு நமக்கு தரும் பாடமாக இருக்கிறது.
வல்லோன் அல்லாஹ் அந்த அம்மையாரிடம் இருந்த அனைத்து நற்குணங்களையும் உயரிய தன்மைகளையும் நமக்கும் நம் குடும்பத்து பெண்களுக்கும் வழங்கி அருள்வானாக

  





No comments:

Post a Comment