ذِكْرُ رَحْمَتِ
رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا (2) إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا
இது உமது ரட்சகன் ஸக்கரிய்யாவிற்கு வழங்கிய
அருளை நினைவு கூர்வதாகும். அவர் தனது ரட்சகனை மெதுவாக அழைத்ததனை எண்ணிப்பார்பீராக.
{19 ; 1,2}
உலகம் ஒரு நியதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது
அந்த நியதியை வல்லோன் இறைவன் ஒருவனே உருவாக்கியவன். அதன் பிரகாகரமே எல்லா
படைப்பினங்களும் இயங்கும். இயங்க வேண்டும். இதுவே இறை விதி.
சில தருணங்களில் நடைமுறைக்கு சாத்தியப்படாத
நிகழ்வுகள் நடந்தேறும். அவைகளெல்லாம் எவற்றை குறிக்கின்றது...? மனிதனின் நம்பிக்கைகளையும் இறைவனின்
பேராற்றலையும் குறிக்கின்றது.
இறைதூதர் ஜக்கரிய்யா (அலை) அவர்கள் இறைத்தூதர்
ஈஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஜக்கரிய்யா
(அலை) அவர்களை முந்தைய வேதக்காரர்கள் யாரும் இறைத்தூதர் என்று ஒப்புக்கொள்ள வில்லை. யூதர்களும், கிருஸ்தவர்களும் அவர்களை
சிறந்த சேவகர் என்றே குறிப்பிடுகின்றனர். அல்குர்ஆன் தான் அவர்களை இறைத்தூதர்
என்று உலகுக்கு அறிமுகம் செய்தது.
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இறைவனின்
மீது நம்பிக்கை பொறுப்பு சாட்டுதல் தவக்குல், சகிப்புத்தன்மையுள்ள ஒவ்வொரு வருக்கும் படிப்பினையாக அமையும்.
كان نبي الله
زكريا عليه السلام قد تقدمت به السن وانتشر الشيب في رأسه وبلغ من الكبر عتيًا،
وكانت امرأته عاقرًا لا تلد، فلما رأى من ءايات الله الباهرات عاين هذه الآية
والكرامة العجيبة من رزق الله تعالى لمريم أم عيسى عليهما السلام الفاكهة في غير
حينها، هنالك رغب في الولد على الكِبر، فطلب من ربه أن يرزقه غلامًا تقيًا يرثه في
العلم والنبوة ويعلم الناس الخير، يقول الله تبارك وتعالى:{هُنالِكَ دَعَا
زكريَّا ربَّهُ قالَ ربِّ هَبْ لي مِن لدُنْكَ ذُرِّيَّةً طيِّبةً إنَّكَ سميعُ
الدُّعاء}سورة ءال عمران.
அன்னை மர்யம் (அலை) அவர்களை பராமரிக்கும்
பொறுப்பை ஜக்கரிய்யா (அலை) அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மர்யம் (அலை) அவர்களின் அறைக்குள் ஜக்கரிய்யா
(அலை) அவர்கள் செல்லும் போதெல்லாம்
அப்போது கிடைக்க கூடிய உணவு பொருட்களில்லாமல் வேறு தருணங்களில் கிடைக்கும்
பொருட்களை அதாவது குளிர் நேரத்தில் கிடைக்கும் பொருட்கள் கோடையிலும் கோடையில்
கிடைக்கும் பழ வகைகள் குளிர் காலத்திலும் கிடைக்க கண்டு மிகுந்த ஆச்சரியத்தோடு
கேட்டார்கள். "இவையெல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைக்கின்றது மர்யமே..? " என்று அதற்கு மர்யம் (அலை) அவர்கள் இவை என்
இறைவனிடமிருந்து கிடைக்கின்றன நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகிறவர்களுக்கு
கணக்கின்றி வழங்குவான் (அத்தியாயம்) என்பதாக
பதிலளிப்பார்கள்.
உடனடியாக ஜக்கரிய்யா (அலை) அவர்களின்
சிந்தனையும் வேகமாக விரியும் சின்னசிறு பெண் அவருக்கான உணவை வெவ்வேறு விதத்தில்
வழங்கும் இறைவனிடம் நாமும் நமது கோரிக்கைகளை முன் வைக்கலாமே..?
நடைமுறைக்கு சாத்தியமில்லாவிட்டாலும் கூட
இறைவனால் சாத்தியப்படாதது எதுவும் இருக்கின்றதா..? என்று சிந்தித்தவர்களாக தனக்கான பிரார்த்தனையை
இறைவனிடம் கேட்க முனைந்தார்கள்.
இறைத்தூதர் ஜக்கரிய்யா (அலை) அவர்கள் மிகவும்
வயது முதிர்ந்த நிலைக்கு சென்று விட்டார்கள். தம்பதிக்கு குழந்தை இல்லை எனக்கு நீ
குழந்தை உனக்கு நான் குழந்தை என்று பாசப்பிணைப்பிலேயே வாழ்க்கையின் இறுதிக்கு
வந்து விட்டார்கள். குழந்தை பெற்றெடுக்க தகுதியில்லாத கணவரின் வயது மனைவியின்
உடற்கூறு ஒருபுறம் இறைவனின் கட்டளையை மக்களிடம் எடுத்துக்கூற தமக்குப்பின் ஒரு
வாரிசு அதுவும் நபித்துவ வாரிசு இல்லையே என்கிற கவலை மறுபுறம் இத்தருணத்தில் தான்
மர்யம் அலை இறைவன் கொடுத்த சிந்தனைக்கு வருகின்றது.
ஜக்கரிய்யா (அலை) அவர்கள் இறைவனிடம்
பிரார்த்திக்கின்றார்கள். என் இறைவா.... எனக்கு ஏராளமான அருள்வளங்களை
கொடுத்திருக்கின்றாய். நான் கேட்டு இதுவரை நீ மறுத்ததே இல்லை. உன் பிரதயோக அருளால்
எனக்கு வாரிசு ஒன்றை அருள்வாயாக. அவர் எனக்கும் யாகூப் (அலை) அவர்களின்
கும்பத்தாருக்கும் வாரிசாவார் என்பதாக...
மனிதனுக்கு எத்தனை செல்வங்கள் இருந்தாலும் மிக
உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம் தான்.
قال النبي صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أي رجل مات وترك ذرية طيبة أجرى الله مثل أجر عملهم ولم
ينقص من أجورهم شيئا)
ஒருவர் தான் இறக்கின்ற வேளையில் ஸாலிஹான குழந்தைகளை
விட்டுச் சென்றால் அந்த குழந்தைகள் செய்யும் அமல்களின் கூலியை அவருக்கும் அல்லாஹ்
வழங்கி விடுகிறான்.{குர்துபி}
தன் மகன் இறந்த
செய்தியை தன் கணவரிடம் சொல்லாமல் மறைத்து
பொறுமை கொண்ட உம்மு சுலைமிடம் அன்றைய இரவு அபூதல்ஹா சந்தோஷமாக இருக்கிறார்.அதன்
பிறகு செய்தியைக் கேள்விப்பட்டு கோபமடைந்து அந்த செய்தியை நபியிடம் சொன்ன போது நபி
ஸல் அவர்கள் உங்கள் இரவில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக என்று துஆ செய்தார்கள்.{முஸ்லிம்}
அந்த துஆவின்
பரக்கத்தினால் அவர்களுக்கு அதன் பிறகு ஒன்பது குழந்தை பிறந்தது.அவர்கள் அனைவருமே
ஹாஃபிழ்களாக இருந்தார்கள்.
قالت أم سليم:
يا رسول الله، خادمك أنس أدع الله له. فقال: (اللهم أكثر مال وولده وبارك له فيما أعطيته)
உம்மு சுலைம் ரலி அவர்கள் தன் மகன் அனஸ் ரலி
அவர்களுக்கு துஆ செய்யும் படி நபியிடம் கூறிய போது நபி ஸல் அவர்கள் அவரது பொருளையும்
குழந்தைகளையும் அதிகப்படுத்து என்று துஆ செய்தார்கள்.{புகாரி}
تزوجوا الولود
الودود فإني مكاثر بكم الأمم). أخرجه أبو داود.
அதிகம் குழந்தையை ஈன்றெடுக்கும் ஒரு பெண்ணை திருமணம்
முடித்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் உங்களைக் கொண்டு நான் என் சமூகத்தை அதிகப்படுத்திக்
கொள்வேன்.{என் சமூகத்தினர்
அதிகம் இருப்பது எனக்கு பெருமை} என்றார்கள்.{அபூதாவூது}
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه و سلم قال : إذا
مات الإنسان انقطع عمله إلا من ثلاثة من صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له
ஒருவர் இறந்த பிறகு அவருக்கு
நன்மைகளை சேர்த்து வைக்கும் காரியங்களில் ஒன்று அவருக்கு துஆ செய்யும் ஸாலிஹான
பிள்ளை.{நஸயீ}
இப்படி பிள்ளைச்
செல்வங்களைப் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் காணக் கிடைக்கின்றன.
ஜக்கரிய்யா அலை அவர்களின் இப்பிரார்த்தனை
நமக்கு ஒரு பாடமாகும். இறைவனிடம் எதையேனும் கேட்கும் பொழுது நன்றி செலுத்தும்
விதமாக ஏறகனவே இறைவன் நமக்களித்த அருள்வளங்களை நன்றியுடன் குறிப்பிட வேண்டும்.
இறைவன் அகமகிழ்ந்து விரைவான பதிலைத் தருவான். அத்துடன் ஜக்கரிய்யா (அலை) அவர்களின்
பிரார்த்தனையில் பொதுநலமும் கலந்திருந்தது. இறைகட்டளையை மக்களுக்கு எடுத்துச்
சொல்ல அவர்களை நல்வழிபடுத்த வாரிசு தேவைபட்டது ஸக்கரிய்யா (அலை) அவர்களோ தச்சர்
ஆகவே அவர்களிடம் பெரிய அளவில் சொத்து சேர்த்திருக்க வாய்ப்பில்லை. அடுத்து அவர்கள்
தள்ளாத வயதில் தான் பிள்ளை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார்கள். ஆக
சொத்துக்களுக்கு வாரிசு கேட்கவில்லையென்பது உறுதி.
மர்யம் (அலை) யின் இது இறைவன் புறத்திலிருந்து
வந்தது என்ற அந்த ஒற்றைச் சொல்லே ஸக்கரிய்யா (அலை)யின் வாழ்க்கையை புரட்டிப்
போட்டது. வயதாலும் பிள்ளை பெற முடியாத உடற்கூறாலும் தளர்ந்திருந்த அத்தம்பதியின்
பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள்
பிறந்தார்கள். அவர்களும் நபியாக ஆக்கப்பட்டு ஏகத்துவத்தை நிலைநாட்ட
பாடுபட்டார்கள்.
ஆக மனிதன் எந்த நிலையானாலும் எவ்வளவு துன்பம்
நேர்ந்தாலும் தன் மீதுள்ள நம்பிக்கையை கைவிடலாகாது. இறைவன் மீது பொறுப்பு
சாட்டிடல் தவக்குல் வேண்டும். இறைகருணை மீதான நம்பிக்கையும் அதற்கான நமது
முயற்சியும் நல்லதொரு பலனைதரும் அதற்காக நாம் செய்ய வேண்டியது
இறைகட்டளைகளை பேணுதல் முழுக்க முழுக்க இறைவனை சார்ந்திருத்தல்.
அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தொழுகை போன்றவற்றை சரியான முறையில் செய்தல்.
தொடர்ந்து பிரார்தித்தல்.
சகிப்புத் தன்மையுடன் இருத்தல்.
இறைவன் ஏற்கனவே செய்த அருள்வளங்களை நினைவு கூறுதல்.
பிரார்த்தனையின் போது எண்ணங்களை விசாலமாக்குதல்.
ஸக்கரிய்யா (அலை) அவர்களின் நிகழ்விலிருந்து
கற்றுக் கொண்ட பாடங்கள் இவை.
மட்டுமல்ல நாம்
கேட்கும் பிரார்த்தனைகள் அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு மார்க்கம் சில நிபந்தனைகளை
வைக்கிறது. அதையும் பேண வேண்டும்.
துஆக்கள்
அங்கீகரிக்கப்படுவதற்குரிய நிபந்தனைகள்
1, தன் தேவைகளை
நிறைவு செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்ற எண்ணம் வேண்டும்.
2, உண்மையான
நிய்யத்தோடும்,உறுதியோடும் அதில் ஈடுபாட்டுடனும் துஆ செய்ய வேண்டும்.
3, ஹராமை
விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.
4, அவசரப்படாமல்
இருக்க வேண்டும். {குர்துபி}
பிள்ளைபேற்றை இறைவனிடனிடம் கேட்போர் இவற்றை
பின்பற்றுவது அவசியம். அத்துடன் இறைவனே கற்றுத் தந்த இப்பிரார்த்தனையும்...
رَبِّ هَبْ لِي
مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
என் இறைவா.... உன்னிடமிருந்து எனக்கு ஒரு
தூய்மையான வழித்தோன்றலை அருள்வாயாக நீ பிரார்த்தனையை செவியுறுபவன் ஆவாய்..
அத்தியாயம் 3 வசனம். 38
رَبِّ لَا تَذَرْنِي
فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
{21 ; 89} ஜக்கரிய்யா அலை கேட்ட இந்த துஆவையும் அல்லாஹ் பதிவு செய்திருக்கிறான்.
இந்த துஆக்களை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க
வேண்டும். அல்லாஹ் நம் எல்லோருக்கும் உயர்ந்த செல்வமான பிள்ளைச் செல்வங்களை வழங்கி
அருள்வானாக
Alhamdulillah arumai
ReplyDeleteMasha allah
ReplyDelete