يَا أَيُّهَا النَّاسُ إِنَّا
خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
மனிதர்களே!
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர்
அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். {49 ; 13}
உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே
வந்த வழித்தோன்றல்கள் தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள், கிளைகள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்குத் தானே தவிர பிரிவினை பாராட்டி,ஒற்றுமையை குலைத்து, பிரிந்து போவதற்கு
அல்ல என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.
படைப்பில்
சிறிய, பகுத்தறிவில்லாத சிறு எறும்பு தன்
இனத்தின் மீது சகோதர பாசத்தோடு நடந்து கொள்கிறது,தன் இனத்தின் மீது கவலைப் படுகிறது,தன் இனத்தோடு ஒற்றுமையோடு வாழ்கிறது.அதனால் தான்
அல்லாஹுத்தஆலா உலகத்திற்கு வழிகாட்டிய அருளிய தன் திருமறை யில் ஒரு
அத்தியாயத்திற்கு எறும்பு என்று பெயர் வைத்து அந்த சாதாரண எறும்புடைய செய்தியையும்
நமக்கு சொல்கிறான்.
இஸ்லாம்
வளர்வதற்கும், உலக மக்களை
தன் பக்கம் கவர்வதற்கும் அடிப்படைக் காரணம், இஸ்லாத்தின் தனித்தன்மையில் ஒன்றான
சகோதரத்துவமும் ஒற்றுமையும் தான்.
இஸ்லாம்
கடமையாக்கியிருக்கிற அனைத்து கடமைகளும் ஒற்றுமையின் நோக்கத்தில் தான்
உருவாக்கப்பட்டுள்ளது.அவைகளை நாம் சிந்தித்துப் பார்த்தால் அனைத்து கடமைகளும் ஒற்றுமையை
நிலைநாட்டுவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவுடன் அங்கே
இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைத்த போது இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம்
தந்தார்கள்.
ஒன்று -
மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவம்.
இரண்டு -
சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை
பரம்பரை
பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில்
ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலம் காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை
சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவம்
வரலாற்றில் பொன் வரிகளால் பொறிக்கப்பட வேண்டியவை.
சமூக
ஒழுங்கில்லாத கோத்திர உணர்வு மேலோங்கியிருந்த அந்த அரபிய மக்களிடம் அன்பையும்
கருணையையும் பரஸ்பரம் உதவி புரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கை மூலம்
வளர்த்தார்கள். இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட தோற்று விடும் அளவிற்கு நபி
ஸல் அவர்கள் ஏற்படுத்திய கொள்கை ரீதியான சகோதரத்துவம் மிகப்பெரிய மாற்றங்களை அந்த
மக்களிடத்தில் ஏற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை.
ஆனால் இன்றைய
நவீன முஸ்லிம் சமூகத்திலிருந்து அழிந்து போய் விட்ட, காணாமல் போய் விட்ட பல
பண்பாடுகளில் ஒன்று சமூக ஒற்றுமை. உலக அளவில், தேச அளவில் மட்டுமல்ல, குறைந்த பட்சம் கிராம அளவில் கூட, ஏன் ஒரு
மஹல்லா அளவில் கூட ஒற்றுமை இல்லாத சமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பலம்
நிறைந்த சமுதாயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டால் அந்தச் சமுதாயம்
பலவீனமான சமுதாயமாக மாறிவிடும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு
தலைதூக்கி விடுமேயானால் அந்த சமுதாயம் நிச்சயம் அழிந்து போகும்.
அல்லாஹ் தன்
அருள் மறையாம் திருமறையில்
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا
وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
" நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய
தூதருக்கும் வழிபட்டு உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்.உங்களுக்குள் சண்டையிட்டுக்
கொள்ளாதீர்கள். அவ்வாறு
ஒற்றுமை இழந்து சண்டையிட்டுக் கொண்டால் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை
குறைந்து விடும் என்று கூறுகிறான். {8 ; 46}
ஒற்றுமையினால்
ஒரு சமூகம் பலம் பெறும்.அதே சமூகம் ஒற்றுமை இழந்து விட்டால் தோல்வியை சந்திக்கும்
என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த பத்ரு உஹரு போர்க்களங்கள் சிறந்த உதாரணம்.
முஸ்லிம்கள்
அன்று பத்ர் களத்தில் ஒருங்கிணைந்து செயல் பட்ட காரணத்தினால் வெற்றிக்கனியை
பறித்தார்கள்.ஆனால் உஹது களத்தில் அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டு கருத்து
வேறுபாடு கொண்ட காரணத்தினால் வெற்றியை சுவைக்க முடியாமல் போனது.
இன்று எந்தக்
கொள்கை பலமும் இல்லாதவர்கள் கூட முஸ்லிம்களான நம்மை வெற்றி கண்டு விடுகிறார்கள்
என்றால் நாம் ஒற்றுமை
எனும் கயிற்றை விட்டு விட்டோம்.அதனால் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.
يا أيُّها النَّاسُ ألا إنَّ ربَّكم واحدٌ وإنَّ أباكم واحدٌ ألا لافضلَ لِعَربيٍّ على أعجميٍّ ولا لعَجميٍّ على عربِيٍّ ولا لِأحمرَ على أسودَ ولا لِأسودَ على أحمرَ إلاَّ بالتَّقوى
தமது இறுதிப்
பேருரையின் போது பல்வேறு முக்கியமான விஷயங்களை கூறிய நபி (ஸல்) அவர்கள்,"கறுப்பர்களை
விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவர் இல்லை" என்று கூறி
சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் அங்கே நினைவுபடுத்தினார்கள்.
ஆனால்
இன்றைக்கு நமக்குள் எத்தனை பிரிவினைகள்,எத்தனை
குழப்பங்கள்,எத்தனை
விரோதங்கள். இன்றைக்கு முஸ்லிம் சமுகத்திற்கு பிற சமுகமல்ல, பெரும்பாலும்
முஸ்லிம் சமூகமே எதிரியாக இருக்கிறது. அது போல் ஒரு முஸ்லிம் நாடு சிரமப்படுவதைப்
பார்த்து இன்னொரு முஸ்லிம் நாடு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்
கிறது.இப்படி நமக்குள் ஒற்றுமையை தொலைத்து விட்டு சகோதரத்து வத்தை இழந்து பிரிந்து
சிதரி கிடப்பதினால் தான் நாம் இன்றைக்கு பலவிதமான இழப்புக்களை சந்தித்துக்
கொண்டிருக்கிறோம்.
இஸ்லாம்
குடும்பங்களுக்கு மத்தியில் மஹல்லாக்களுக்கு மத்தியில் சமூகத்திற்கு மத்தியில்
நாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்துகிறது.மட்டுமல்ல பிரிந்து கிடக்கும் சமூகங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை
ஏற்படுத்துவதை மிக உயர்ந்த காரியம் என்று கூறுகிறது.
عن
أبي الدرداء قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ألا أخبركم بأفضل من درجة
الصلاة،
والصيام والصدقة؟" قالوا: بلى. قال: "إصلاح ذات البين" قال:
"وفساد ذات البين هي الحالقة
தொழுகை,நோன்பு ஹதகா இவைகளின் மூலம் ஏற்படும் அந்தஸ்தை விட
மிக சிறந்த அந்தஸ்தைத் தரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லவா என்று நபி ஸல்
அவர்கள் கேட்ட போது ஆம் என்று கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இரண்டு
பேருக்கு மத்தியில் சுமூகத்தை ஏற்படுத்துவது என்று கூறினார்கள். {அஹ்மது}
عن أنس؛ أن النبي صلى الله
عليه وسلم قال لأبي أيوب: "ألا أدلك على تجارة؟" قال: بلى: قال: "تسعى
في صلح بين الناس إذا تفاسدوا، وتُقَارب بينهم إذا تباعدوا"
மிகச்சிறந்த
வியாபாரத்தை உங்களுக்கு சொல்லட்டுமா என்று கேட்ட மாநபி ஸல் அவர்கள், குழப்பம்
ஏற்பட்ட நேரத்தில் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபடுவது, அவர்கள்
சண்டையிட்டு தூரமான நேரத்தில் அவர்களை நெருக்கி வைப்பது என்று கூறினார்கள்.
முஸ்னதுல் பஸ்ஸார் {13 /185}
அதேபோல்
ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முனைபவன்
அல்லது ந்த நோக்கத்தில் செயல் படுபவன் அல்லது ஒற்றுமையான சமூகத்திலிருந்து
பிரிந்து செல்பவன் இவர்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பலவேறு விதமான
கூட்டங்கள் தோன்றும். இந்த மக்கள் தம் விவகாரங்களில்
ஒற்றுமையாக இருந்திடும்போது, அவர்களிடையே குழப்பத்தை உருவாக்க முயலுபவனை வாளைக்கொண்டு முடித்து விட வேண்டும்; அவர் யாராக இருந்தாலும்
சரியே!" (முஸ்லிம்).
முஸ்லிம்களின்
ஒற்றுமை என்ற சக்கரத்தில் தடைகளை உருவாக்க முயற்சி செய்யும் மனிதன் இறைவனின் கீழ்க்காணும்
கட்டளையின்கீழ் வருகின்றான்:
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ
الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ
جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
"நேரான வழி இன்னது
என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்)இத்தூதரை விட்டுப் பிரிந்து,மூமின்கள் செல்லாத
வழியில் செல்பவனை நாம் அவன் செல்லும் தவறான வழியிலே செல்லவிட்டு(பின்னர்) நரகத்தில் நுழையச்செய்வோம். அதுவே சென்றடையும்
இடங்களில் மிகக் கெட்டதாகும்" (அல் குர் ஆன் 4 :115).
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "கீழ்ப்படிதலிருந்து
விலகி ஓடிவிட்டவன் (உம்மத்)வட்டத்திலிருந்து
பிரிந்து விட்டான். அந்நிலையிலேயே
இறந்து விடுவானேயானால் திண்ணமாக அவன் இஸ்லாமல்லாத ஒரு நிலையிலேயே இறந்தவன் போலாவான்" (புஹாரி).
நம் சமூகத்தின்
மிகப்பெரும் பலமான அந்த ஒற்றுமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் அல்லாஹ்வுடைய உதவி எக்காலமும் கிடைக்காது. மென்மேலும் பல
சிரமங்களைத்தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.
No comments:
Post a Comment