Tuesday, May 23, 2017

தராவீஹ் ஒன்பதாம் நாள்



   أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன் : 10:62,63,64)

எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களை நேர்வழிப்படுத்தவும் அவர் களுக்கு சத்தியத்தை எடுத்துக் கூறவும் உலகிற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதர்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைத்தான்.இவ்வாறே ஆதிபிதா ஆதம்(அலை) அவர்கள் முதற் கொண்டு அனைத்து நபிமார்களும் இறைவனின் தூதர்களாக அகிலத்தில் தோன்றினார்கள்.அவர்கள் தங்கள் சமூகத்தாருக்கு சத்தியத்தை இனம் காட்டி அசத்தியத்தை ஒழித்தார்கள்.மக்களை இறைவன் அளவில் மீள வைத்தார்கள்.

நபிமார்கள் அனைவருக்கும் முத்திரையாக,அனைத்து நபிமார்களுக்கும் தலைவராக,அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தில் அவதரித்தார்கள்.அண்ணலாரின் வருகையால் அகிலத்தில் இருள் ஒழிந்தது. ஈமானிய ஒளிக்கீற்று பூமி முழுக்க படர ஆரம்பித்தது.மூட நம்பிக்கைகள் மண்ணில் புதைந்தது. அழகிய கலாச்சாரங்களின் விதைகள் மண்ணில் தூவப்பட்டது.மனிதர்களிடையே இருந்த தீய பழக்கவழக்கங்கள் மங்கியது.அவர்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

அல்லாஹ் யார் என்றும் அவனது ஆற்றல்கள்,அவனது வல்லமைகள் என்னவென்றும் உணரப்பட்டது அண்ணல் நபியின் வருகையால் தான். அதுவரை அநியாயக்காரர்களையும்,தீயவர்களையும் மட்டுமே சுமந்து வந்த இப்பூமி நல்லோர்களையும் உயர்ந்தவர்களையும் சுமக்க ஆரம்பித்தது பூமான் நபியின் வருகையால் தான்.மிருகங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் மனிதர்களாகவும் மனிதப்புனிதர்களாகவும் உலகில் உலா வரத் தொடங்கியது உம்மி நபியின் வருகையால் தான். உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்றும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்றும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் ஜாதிகளை மறந்து குலம் கோத்திரங்களை மறந்து அனைவரும் உற்ற தோழர்களாக உயிர் கொடுக்கும் நண்பர்களாக மாறியது தூய நபியின் வருகையால் தான்.

நபியின் வருகை உலகத்தின் போக்கையே மாற்றியது என்று சொன்னால் மிகையாகாது.மாநபி (ஸல்)அவர்கள் அகிலத்தில் ஏற்படுத்திய மாற்றங்களின் கனம் அந்தளவு அமைந்திருந்தது.அந்த நபியின் வருகைக்குப் பின்னால் சத்தியத்தை நிலை நிறுத்துவதற்காக மாநபி (ஸல்) அவர்கள் செய்த அந்தத்தூய பணியை அவர்கள் இடத்தில் இருந்து செய்வதற்காக வந்த தியாகிகள் தான் வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள்.

இறைவனுக்கு கட்டுப்பட்டு,இறைதூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அனுவளவும் பிசகாமல் பின்பற்றி, தன் வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட தவற விடாமல் திருக்குர்ஆனின் சீர்மிகு போதனைகளை நெஞ்சில் ஏந்தி இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தூயவர்கள் தான்  வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள்.

இன்றைக்கு ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மேலே கூறப்பட்ட கண்ணோட்டத்தில் நாம் சிந்தித்தால் வலிமார்களில் முதன்மைப் பெற்றவர்கள் நபி ஸல் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்த வார்த்தெடுக்கப்பட்ட அருமை ஸஹாபாக்கள் தான்.வலிமார்களுக்கென்று என்ன அடையாளத்தை என்ன இலக்கணத்தை மார்க்கம் சொல்கிறதோ அவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள் ஸஹாபாக்கள்.அதனை அடுத்து அதே இலக்கணங்களோடு உலகில் தோன்றியவர்கள் அனைவரும் வலிமார்கள் தான்.

வலிமார்களின் அடையாளம் என்ன ? 
إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே! "இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது.எனினும்அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள்".(அல்குர்ஆன்  8:34)

قالَ رجلٌ يا رسولَ اللَّهِ مَن أولياءُ اللَّهِ قالَ الَّذينَ إذارُءوا ذُكِرَ اللَّهُ

الراوي: عبدالله بن عباس المحدث: البزار           - المصدر: الأحكام الشرعية الكبرى - الصفحة أو الرقم: 3/293
ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள். (நூல் பஸ்ஸார்)

அல்லாஹ்வின் நினைவை திறந்து விடும் திறவுகோளாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வரும் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் தப்ரானி 10325)

எனவே எவர்களைப் பார்த்தால் இறைவனின் யாபகம் வருகிறதோ அவர்கள் அனைவரும் இறைநேசம் பெற்றவர்களே என்பது தெளிவாகிறது.

வலிமார்களின் அந்தஸ்து

قال اللهُ عزَّ وجلَّ مَن آذى لي وليًّا فقد استحلَّ مُحارَبتي وما تقرَّب إليَّ عبدي بمثلِ أداءِ فريضتي وإنَّه ليتقرَّبُ إليَّ بالنوافلِ حتَّى أُحِبَّه فإذا أحبَبْتُه كُنْتُ رِجْلَه الَّتي يمشي بها ويدَه الَّتي يبطِشُ بها ولسانَه الَّذي ينطِقُ به وقلبَه الَّذي يعقِلُ به وإن سأَلني أعطَيْتُه وإن دعاني أجَبْتُه وما تردَّدْتُ عن شيءٍ أنا فاعلُه كتردُّدي عن موتِه وذلك أنَّه يكرَهُ الموتَ وأنا أكرَهُ مُساءَتَه

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 6502)

إن من عبًاد الله لأناسا ما هم بأنبياء ، ولا شهداء ، يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى . قالوا : يا رسول اللهِ ، تخبرنا من هم ، قال : هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ، ولا أموال يتعاطونها ، فوالله إن وجوههم لنور ، وإنهم على نور : لا يخافون إذا خاف الناس ، ولا يحزنون إذا حزن الناس . وقرأ هذه الآية : ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

الراوي: عمر بن الخطاب المحدث: أبو داود        - المصدر: سنن أبي داود - الصفحة أو الرقم: 3527
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப் படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.அறிவிப்பவர் உமர் பின் அல் ஹத்தாப்ரலியல்லாஹு அன்ஹு (நூல் அபூதாவூத் 3060)

அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்கூறினார்கள். (நூல் புகாரி 2703)

قال الطبراني في الأوسط : ثنا عن أنسقال : قال رسول الله - صلى الله عليه وسلم ( لن تخلو الأرض من أربعين رجلا مثل خليل الرحمن فبهم يسقون وبهم ينصرون ، ما مات منهم أحد إلا أبدل الله مكانه آخر
மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். "எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்" என்று கூறினார்கள்.

இன்று வலிமார்கள் என்ற வார்த்தையே மக்களுக்கு மத்தியில் அலர்ஜியாகிப் போனது.புனிதம் நிறைந்த வலிமார்களின் மீது இன்று ஒரு சிலர் தவறான புரிதலை ஏற்படுத்தியதின் விளைவு தான் இது. ஆனால் வலிமார்களின் கண்ணியம் மகத்தானது, உயர்ந்தது. அவர்களை பகைத்துக் கொள்பவனிடம் வல்லோன் அல்லாஹ் போர் பிடகடனம் செய்வதாக பார்க்கிறோம்.8 ; 34 வசனத்தின் படி வலிமார்கள் யாரென்று பலபேருக்கு தெரியாது.இன்னொரு கருத்தின் படி, தான் ஒரு வலி என்று நிறைய வலிமார்களுக்கே தெரியாது.


எனவே நம்மில் யாரும் வலியாக இறைநேசராக இருக்கலாம்.அதனால் யாரையும் பகைக்காமல் மனம் நோகடிக்காமல் எல்லோரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்படி வாழ்ந்து விட்டால் நாம் ஜெயம் பெறலாம்.வலிமார்கள் யாரையும் பகைத்து விடாமல் எல்லோரையும் மதித்து வாழும் பாக்கியத்தையும் வலிமார்களின் தன்மைகளை நாமும் பெற்று அல்லாஹ்வின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தையும் அல்லாஹ் தருவானாக!

2 comments:

  1. لهم البشرى في الحياة التبديل الدنيا و في الآخرة என்பதுதவறு لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لاتبديل لكلمات الله என்பதுதான் சரி கவனத்தில் கொள்ளவும்

    ReplyDelete
  2. بارك الله لكم
    سعيكم مفيد مشكور

    ReplyDelete