Friday, May 19, 2017

ரமலானும் ஆரோக்கியமும்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.பாக்கியம் நிறைந்த அந்த ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவானாக! ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் உடல் தெம்போடும் கடந்த வருடங்களை விட நிறைவாக அதிகமாக அமல்கள் செய்து அல்லாஹ்வின் திருப்தியையும் உயர்ந்த அந்தஸ்து களையும் பெறுவதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளை கள்தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமா இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும், நன்மைகளும் இருப்பதை நாம் பாக்கலாம்.  

உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இஸ்லாத்தின் கடமைகளை ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத் தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் நாம் வைக்க இருக்கிற இந்த நோன்பிலும் நிறைய நன்மைகளும் பயன்களும் இருக்கிறது.அதைத்தான் நாம் இன்றைக்கு அலச இருக்கிறோம்.

இன்றைக்கு நாம் அனைவருமே ஆரோக்கியத்தை நோயின்றி சுகமாக வாழ்வதை விரும்புகிறோம். ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.ஆரோக்கியம் இருந்தால் நாம் வாழ்வை அனுபவிக்க முடியும்.ஆரோக்கியம் இல்லாமல் 100 வருடம் வாழ்ந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.இஸ்லாமும் அந்த ஆரோக்கியத்தைத் தான் அதிகம் கேட்கும் படி சொல்கிறது.
أن رجلاً جاء إلى النبيِّ صلى الله عليه وسلم فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ قال : سَل ربَّك العافيةَوالمعافاةَ في الدنيا والآخرةِ , ثم أتاهُ في اليومِ الثاني ، فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ فقال له مثلَ ذلكَ ، ثم أتاهُ في اليومِ الثالثِ ، فقال له مثلَ ذلكَ ، قال : فإذا أُعْطِيتَ العافيةَ في الدنيا ، وأُعْطِيتَها في الآخرةِ فقد أفلَحتَ.
الراوي: أنس بن مالك المحدث: الترمذي - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 3512
நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும்,மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள். [திர்மிதி ; 3512]

ஆரோக்கியம் தான் வெற்றிக்கான முதற்படி என்று சொல்கிறார்கள்.ஆனால் இன்றைக்கு நம்மிடத்தில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம்ம வீட்டுல எது இருக்குதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கண்டிப்பா இருக்கும்.நம்மில் அத்தனை பேர் வீட்டிலும் மினி மெடிக்கல் ஷாப பே இருக்கிறது. அந்தளவு நோய் நொடிகளின் பிடியில் நாம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இஸ்லாம்  ஆரோக்கியம் குறித்து சொல்லியிருக்கிற ஒரே ஒரு அறிவுரை நாம் விட்டு விட்டோம்.அதனால் நாம் இன்றைக்கு நோயினால் சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

கொசுவை ஒழிப்பதை விட அந்தக் கொசுக்களை உற்பத்தியாக்கும் கழிவு நீரையும் அழிப்பது தான் புத்திசாலித்தனம்.இன்றைக்கு மருத்துவ உலகம் நோய் நொடிகளை அழிக்க மருந்துகளைத் தருகிறது.ஆனால் இஸ்லாம் அந்த நோய்களை உற்பத்தியாக்கும் காரணங்களைக் கண்டறிந்து அதை கலைவதற்கு அறிவுரைகளை வழங்குகிறது.

இன்றைக்குள்ள எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுப்பாடில்லாத உணவு முறை தான். வாழ்வதற்காக உண்ண வேண்டும்.ஆனால் இன்றைக்கு நாம் உண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தளவு உணவு முறைகளில் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் யோய் விட்டது. அது தான் இத்தனை நோய்களுக்கும் காரணம்.

இஸ்லாம் அந்த உணவுக் கட்டுப்பாட்டை நமக்கு வழியுறுத்துகிறது.

நாம் எந்தளவு உணவை குறைந்துக் கொள்கிறோமோ அந்தளவு நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.உணவு கூட கூட நோய்களும் அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் தான் இஸ்லாம் பசியை   வலியுறுத்துகிறது, அதிகம் பசியோடு இருப்பதை சிறந்த பண்பு என்று சித்திரிக்கிறது.
"جاهدوا أنفسكم بالجوع والعطش فإن الأجر في ذلك كأجر المجاهد في سبيل الله وأنه ليس من عمل أحب إلى الله من جوع وعطش
وقيل يا رسول الله أي الناس أفضل? قال "من قل مطعمه وضحكه ورضي مما يستر به عورته
உலகம் முறையாக இயங்குவதற்கு அடிப்படைக் காரணம் என்ன ?எதை அடிப்படையாக வைத்து உலகம் இயங்குகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.
எனவே உணவைக் குறைத்துக் கொண்டு அதிகம் பசியாக இருப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளும் பயன்களும் அதிகம்.இந்த அடிப்படையில் நாம் சிந்தித்தால் நோன்பில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
صوموا تصحوا
إن الله تبارك وتعالى أوحى إلى نبي من بني إسرائيل أن أخبر قومك
நோன்பில் அப்படி என்ன ஆரோக்கியம் இருக்கிறது? நோன்பிற்கும் உடல் சுகத்திற்கும் அப்படி என்ன தொடர்பு? இருக்கிறது என்று நாம் யோசித்தால் இன்றைக்கு உள்ள அறிவியல் நிபுணர்களும், மருத்துவ நிபுணர்களும் நமக்கு பல்வேறு சுவையான செய்திகளை சொல்லித் தருகிறார்கள்.
30 நாள் தொடர்ந்து நோன்பு வைத்தால் உடல் பலகீனமாகி விடும்,உடலில் சத்து குறைந்து விடும் என்று இன்றைக்கு சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவில்லாமல், சாப்பிடாமல் இறந்து  போனவர்களை விட அதிகமாக அளவுக்கு அதிகமாக,வயிறு புடைக்க  சாப்பிட்டு இறந்தவர்கள் தான் அதிகம் என்று இன்றைய புள்ளி விபரம் சொல்கிறது.
நோன்பு வைப்பதால் உடல் வலிமை அதிகமாகிறது, உடலில் ஒரு விதமான  தெம்பு ஏற்படுகிறது என்றெல்லாம் மார்க் குலிஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார்.
அமெரிக்காவில உள்ள  டாக்டர் S.N.M ஹாஸ் சொல்வதைப் பாருங்கள் ;
நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மட்டுமல்ல ரொம்ப தொன்மையான, பழமையான நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோய்வாய் பட்டு, உடல் ரொம்ப பலகீனமாகி விட்டது. அந்த நேரத்தில் ஒரு சில தினங்களாக சாப்பிடாமல் என் வயிற்றை காலியாக்கினேன்.அதற்குப் பின்னால் தான் என் உடம்புக்கு ஒரு தெம்பு கிடைத்தது. நோன்பு வைப்பதினால் ஏதோ புதிய சக்தி உடலில் பாய்வதை நான் உணர்ந்தேன். உடலில் என்றைக்கும் இல்லாத அளவு ஒரு உத்வேகம் கிடைப்பதை நான் உணர்ந்தேன். எனவே பல நோய்களை தடுப்பதற்கும், உடல் பலகீனமானவர்கள் உடல் தேறுவதற்கும் நோன்பு தான் சிறந்த தீர்வு  என்று நான் கண்டு பிடித்தேன் என்று சொல்கிறார்.
ஒரு நாள் நோன்பு வைப்பது மூன்று வாரம் தொடர்ந்து மருத்து சாப்பிடுவதற்குச் சமம் என்பது மருத்துவத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய இப்னு சீனா அவர்களின் கருத்து.
அதுமட்டுமில்லாமல் யார் என்றைக்கும் இளமையோடு இருப்பதற்கு  விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதற்கான சிறந்த வழிமுறை நோன்பு தான் என்று சைல்டு என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.
 கொஞ்சம் புழுக்களை வைத்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார் ;சில புழுக்களுக்கு அவை என்னென்ன விரும்பி சாப்பிடுமோ அந்த எல்லா உணவையும் கொடுத்தார். ஒரு நேரம் விடாமல் ஒவ்வொரு நேரமும் அவைகளுக்குத் தீனி போட்டார். இன்னும் சில புழுக்களுக்கு ஒரு நேரம் உணவு கொடுத்து அடுத்த நேரம் பட்டினி போட்டார். அதாவது ஒரு நேரம் உணவு.ஒரு நேரம் பட்டினி, இப்படியே வளர்த்தார். எந்த புழுக்களுக்கு அதிகமாக தீனி போட்டு,எல்லா நேரமும் தீனி போட்டு வளர்த்தாரோ அந்த புழுக்கள் அனைத்தும் சீக்கிரமே இறந்து விட்டது. எந்த புழுக்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அரை தீனி போட்டு ஒரு நேரம் உணவு ஒரு நேரம் பட்டினி என்று வளர்த்தாரோ அந்த புழுக்கள் தான் அதிக நாள் உயிர் வாழந்தது.
அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தான் பாதி நேரம் சாப்பிட்டு பாதி நேரம் வயிற்றை காலியாக போடும் நோன்பு, மனிதனுக்கு இளமையை தருகிறது என்று கண்டு பிடித்து இந்த உண்மையை உலகத்திற்குச் சொன்னதாக நாம் கேள்விப் படுகிறோம்.
நமது உடல் சரியாக இயங்குவதற்கு நம் உடம்பில் உஷ்ணம் சரியாக இருக்க வேண்டும்.உஷ்ணம் அதிகாவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது.அதிகமாக இருந்தாலும் ஆபத்து. குறைவாக இருந்தாலும் ஆபத்து. ஆனால் இன்றைக்கு அப்படியா இருக்கிறது? ஒன்று  ரொம்ப அதிகமாகி விடுகிறது. அல்லது ரொம்ப குறைவாக ஆகி விடுகிறது.ஆனால் நோன்பு வைப்பதினால் அதிகப்படியான உடல் வெப்பம் குறைந்து உஷ்ணம் சமநிலைக்கு வருகிறது என்பதும் இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.
இதை அன்றைக்கே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
இந்த ஹதீஸை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்த்தால் நபி [ஸல்] அவர்கள் எந்த அளவு தூர நோக்கு சிந்தனையோடும், நோன்பில் ஏற்படும் மருத்துவம் குறித்தும் பேசியிருப்பார்கள் என்று நாம் புரிந்து காள்ள முடியும்.
பொருள் வசதி உள்ளவர்கள் திருமணம் முடியுங்கள்.பொருள் வசதி  இல்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்ல காரணம் என்ன? வாலிபப் பருவம் என்பது, இணையைத் தேடுகிற பருவம். குறிப்பிட்ட வயது வந்து விட்டால் திருமணம் செய்து வைக்க வேண்டும்.அந்த திருமணம் அவனுக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும் திருமணம் முடிக்காமல் இருந்தால் அவன் தவறான பாதையில் போய் விடுவான். அதனால் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
திருமணம் என்றால் இஸ்லாமிய சட்டப்படி அதற்கு உடல் தகுதி மட்டும் போதாது.பொருளாதார தகுதியும் இருக்க வேண்டும்.பொருள் தகுதியும், உடல் தகுதியும் இருப்பவன் தான் திருமணம் செய்ய முடியும்.
ஆனால் ஒருவனுக்கு உடல் தகுதி இருக்கிறது.ஆனால் பொருள் தகுதி இல்லை. பொருள் தகுதி இல்லையென்றால் திருமணம் முடிக்க முடியாது. இந்த வயதுல திருமணம் முடிக்க வில்லை யென்றால் தவறான காரியத்திலும் போய் விடுவான்.
இப்ப என்ன செய்வது ? என்று யோசிக்கும் போது அதற்குத் தான் பதில் தருகிறார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ;- பொருள் தகுதி இல்லையென்றால் நீங்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கு கேடயமாக இருக்கும் என்று சொல்லி, நோன்பு மனித உடம்பில் உஷ்ணத்தை கட்டுப் படுத்துகிறது என்ற அறிவியல் உண்மையை அழகாக சொல்லி விட்டார்கள் நபி [ஸல்] அவர்கள்.
இப்படி பல்வேறு பலன்களை நோன்பு தருவதினால் தான்  {FASTING IS A BEST MADECINE}  உண்மையான நோன்பு ஒரு சிறந்த மருத்துவம் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.





No comments:

Post a Comment