ஈடில்லாக் கருணையாளன்
அல்லாஹ்வைப் போற்றி அவன் தூதராம் அவனி வந்த அண்ணல் நாயகத்தின் ஆன்ம ஆசி வேண்டி
..............
துன்யாவைத் தேடித்
திரியாதீர்கள். கல்வியைக் கொண்டே
ஈடுபடுங்கள். உங்களுக்காகத்தான் நான் வணிகமே செய்கிறேன் எனச் சொல்லிக் கொண்டே ஆண்டு
முழுக்க தேவைப்படும் செல்வத்தை புழைல் இப்னு இயாழ் எனும் பெரியாருக்கு அள்ளிக்
கொடுக்கும் வள்ளலாக வழங்கி வந்த வணிகப் பெருமகனார் தான் அப்துல்லாஹ் இப்னுல்
முபாரக் எனும் பெரியார்.
இப்படியே இஸ்லாமிய
வரலாற்றில் வள்ளல்களால் வார்த்தெடுக்கப்பட்ட அரபிக்கல்லூரிகள்
ஏராளம், தாராளம். அவ்வரிசையில் தமிழகத்தின் அரபிக்கல்லூரிகள் அதிகம் கொண்ட ஒருங்கிணைந்த தஞ்சையின் திருவாரூர் மாவட்ட த்தில் அத்திக்கடை எனும் சிற்றூரில் வாஹித்
ஃபாத்திமா எனும் பெயரில் செயல்படும் அரபிக்கல்லூரி தான் நானுங்க!
இறையருளால் V.S.அப்துல் வாஹித்
எனும் ஒற்றை மனிதர், மறுமைக்கு தனக்கு உதவிடும் நன்நோக்கில் தன் செல்வத்திலிருந்து என்னை உருவாக்கினார். (அல்லாஹ் கபூல்
செய்வானாக!)
ஹிஜ்ரி 1412 ஷவ்வால் பிறை
23 (27 - 04 - 1992) அகிலத்தின் அறிவுக்
கண்ணை திறக்க வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதமான திங்கட்கிழமை
காலை யில் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வர் ஷம்சுல் மில்லத்
மௌலானா அலஹாஜ் K.A. முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் (அல்லாஹ் அவர்களின் மண்ணரையை ஜொலிக்கச்
செய்வானாக!) அவர்கள் தலைமையில்
தமிழகத்தின் தாய்க்கல்லூரி ஜாமியா அல் பாக்கி யாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியின்
முன்னால் முதல்வர்,ஆந்திர மாநிலம் கடப்பா ஜாமிவுல் உலூம் ஸனாயிய்யா
அரபிக்கல்லூரியின் முதல்வர்,நம் உயிரினும் மேலான நாயகக்கண்மனியின் குலக் கொழுந்து
மௌலானா அல்ஹாஜ் அஸ்செய்யிது அப்துல் ஜப்பார் காதிரி ஹழ்ரத் (அல்லாஹ் அவர்களின் ஃபைளானை நம் மீது சொரிவானாக!) அவர்களின்
திருக்கரங்களால் திறக்கப்பட்டேன்.
பாக்கியாத்தில் பதினேழு
ஆண்டுகள் பேராசிரியராய் பணியாற்றி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் ஆசானாய்,சுன்னத்
ஜமாஅத் கொள்கைகளுக்கு எதிராக குழப்பம் விளைவித்தவர்களோடு இலங்கையில் விவாதம்
செய்து வீழ்த்திய வடகரை மௌலானா அஃப்ஸலுல் உலமா முஹம்மது ஷரஃபுத்தீன் ஹழ்ரத்
அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நான்கு, ஐந்து,ஆறு எனும் மூன்று வகுப்பு களோடு
ஆரம்பிக்கப்பட்ட என்னில் 23 - 1 – 1994 அன்று முதலாம் பட்டமளிப்பு விழா
நடைபெற்றது.இலங்கை மௌலவி ஒருவர்,கேரளா மாநிலம் பாலக்காடு மௌலவி ஒருவர்,தமிழக
மௌலவிகள் நால்வர் என ஆறு வாஹிதிகளை இச்சமூகத்திற்குத் தந்தேன்.அன்றிலிருந்து இன்று
வரை தொய்வின்றி தொடராக 24 பட்டமளிப்பு விழாக்களில் நூற்றி பத்தொன்பது (119) வாஹிதிகளை தந்துள்ளேன்.(அல்ஹம்து லில்லாஹ்) இதில் மூன்று
நபர்கள் இறை அழைப்பை ஏற்று மரணக்காற்றை சுவாசித்துள்ளனர். (அல்லாஹ் அவர்களின் மண்ணரையை பிரகாசிக்கச்
செய்வானாக!)
தரமான ஞானம் கொண்ட
பெருமக்களை நான் ஈன்றுள்ளேன் என்பதற்கான ஆதாரமே ; என்னுள் இன்று
போராசிரியர்களாய் மூன்று வாஹிதிகள்.
என்னோடு தொடர்பு கொண்டு
உறவாடிய ஞானவான்களை நன்றி யோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் அம்மாப்பட்டினம்
தந்த மௌலானா அல்ஹாஜ் S.A.ஷைகு தஹ்லான் பாகவி ஹள்ரத் அவர்கள் ஆறு ஆண்டுகள் முதல்வராய்
பணியாற்றியப் பெருமகனார்.
எனது கண்ணியமிகு
ஸ்தாபகர், மாணவர்கள் வாழ்க்கையில் அதிக கவனம் கொண்டார்.எனவே தான் கல்வி எத்துனை
வழிகளில் வருகிறதோ அத்தனையையும் மொத்தமாய் என்னுள் கொண்டு வந்தார்.
இப்போது எனக்குள்ளே
நவீனமான கனினி அறை.அதன் மூலமாக எண்ணற்றோர் பலன் பெற்று D.C.A (DIPLOMA IN COMPUTER APPLICATION) சான்றிதழ்
பெற்றுள்ளனர்.சென்னை பல்கலைக் கழகத்தில் B.A வுக்கு நிகரான அஃபஸலுல்
உலமா டிகிரிக்கும், பள்ளிப்படிப்பில் எட்டாம் வகுப்பு முதல் B.COM இறுதியாண்டு
வரைக்கும் ஸ்தாபகரே பொறுப்பேற்று பொறுப்புள்ள மனிதராய் பூரிப்படைகிறார்.
என் பிள்ளைகளோ திருச்சி
ஜமால் முஹம்மது கல்லூரியில் D.F.A (DIPLOMA IN FUNCTIONAL ARABIC) எனும் படிப்பை
அவர்கள் சார்பில் படிக்கின்றனர்.
மூன்று
ஆசிரியர்கள்,மூன்று வகுப்புகள் என வாழ்க்கையைத் துவக்கிய நான் ; இன்று ஏழு
வகுப்புகள்,ஆறு ஆசிரியர்கள், பள்ளிப் படிப்பிற்கு மூவர் என பரிணமித்து நிற்கிறேன்.
இறுதியாக என் பெயரிலேயே
அறக்கட்டளைத் தொடங்கி கல்வி முதல் திருமணம் வரை எல்லா உதவிகளையும் செய்து வரும்
அல்ஹாஜ் V.S.
அப்துல் வாஹிது
அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் துஆ செய்யுங்கள்.
நான் அன்றிலிருந்து இன்று
வரை சுன்னத் வல் ஜமாஅத்தின் கூடாரமாகவே நிற்கிறேன்.
கியாமத் வரை இப்படியே வீர
நடைபோட மன்னவனிடம் மன்றாடுங்கள் எனக்கூறி விடை பெறுகிறேன்.
இப்படிக்கு
உங்கள் வாஹித் ஃபாத்திமா
Barakallahu lanaa
ReplyDeleteAameen
ReplyDeleteபாரகல்லாஹு லகும் சகோ....
ReplyDelete